சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதுடன் இந்த நோய்கள் காவு கொள்ளும் உயிர்களின் எண்ணிகையும் சமானமாக அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தினாலும் சுகாதார அமைச்சினாலும் பல் வேறுபட்ட செயல் திட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அமுல்படடுத்த பட்டும் பெருமளவு நிதி சிறுநீரக நோய்களுக்காக ஒதுக்கப்படட போதும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துவருவது கவலைக்கு இடமளிக்கின்றது .
சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக கல் அடைப்பு என்பது இன்று எம் மத்தியில் ஒரு பொதுவான சொற் பதம் ஆகியுள்ளது .இன்று வட மத்திய மாகாணதை பொறுத்த வரையில் தாங்க முடியாத இடுப்பு வலியுடன் வைத்தியசாலை வரும் நோயாளர்களின் 40 வீதமானவர்களுக்கு சிறுநீரக கற்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .
சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாக நமது குடிநீர் அமைகின்றது .`நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருப்பது தான் நம் உழைக்கும் மக்களின் பெரிய குறைபாடாக உள்ளது . இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் சிறுநீரக கல் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் கல் குறித்த வரலாற்றுச் செய்திகள் சான்று பகிருகின்றன .
குடிக்கும் நீரை பொறுத்தவரையில் பல வகைவகையான கருத்து வேறுபாடுகள் நம் மக்களை காணப்படுகின்றது . கல்சியம் நீரை பருகினால் சிறுநீர் கற்கள் வரும் அபாயம் உண்டா ? Filter நீர் அருந்துவது அவசிஅவசியமா? எந்த அளவு நீர் பருக வேண்டும்? இப்படியான பல கேள்விகளுடன் நான் நோயாளர்களை தினமும் சந்தித்து வருகின்றேன்.
கல்சியம் நீரை பருகுவதால் சிறுநீரக கற்கள் தோன்றும் என்பது ஒரு மூட நம்பிக்கியாகும் . எமது உடம்பில் கல்சியம் அளவை கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்கு படுத்தும் சுரப்பிகள் உள்ளன. இவை ஒருவருக்கு தேவையான கல்சியத்தின் அளவை கட்டுப்படுத்துவதுடன் மிகையான கல்சியத்தை உடம்பில் அகத்துறிஞ்சாது வெளியேற்றி விடுகின்றன. எனவே அதிகளவில் கல்சியம் நீரை பருகுவதோ கல்சியம் வில்லைகளை பாவிப்பதோ சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற நம்பிகையில் இருந்து நீங்கள் வெளிவருவது முக்கியமாகும் .
இன்று filter நீரின் அதிகரித்த பயன்பாடு பல வியாபாரிகளை அதன் பக்கம் இழுத்து உள்ளது. Filter நீர் குடிப்பது என்பது ஒரு தவறான விடயமில்லை. ஆனால் filter நீர் குடிப்பதனால் சிறுநீரக கற்கள் தோன்றுவதை தட்டுக்கலாம் என்ற கறபனையில் filter நீரை பாவிப்பதில் தான் தவறு இருக்கின்றது.
இன்று அனுராதபுரம் பொலநறுவை போன்ற மாவட்டங்களில் காரணம் தெரியாத சிறுநீரக நோய்களின் தாக்கம் ( CKD U ) அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அத்துடன் இந்த மாவட்டங்களில் குடிநீரிலும் மாசுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் filter நீரின் பயன்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியது.
என்றாலும் காரணம் தெரியாத சிறுநீரக நோய்களுக்கும் குடிநீருக்குமான தொடர்புகள் இன்னும் விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
நாம் குடிக்கு நீரின் அளவு சிறுநீரக கற்களுடன் தொடர்புபட்டுள்ளது. எமது நெருக்கடி நிறைந்த வாழ்க்கையில் நம் மறந்து விடும் ஒரு விடயம் தான் நீர் அருந்துவது என்பது. இலங்கை ஒரு வெப்ப வலய நாடு என்பதாலும் பெரும்பாலான மக்கள் கடினமான வேலை செய்து உழைபவர்களாகவும் இருப்பதால் கணிசமான அளவு நீரை வியர்வையாக இழந்து விடுகின்றனர். இதை சமப்படுத்த அதிகளவு நீர் அருந்துதல் இன்றி அமையாதது .
சாதாரண மாசில்லாத ஆற்று, கிணற்று நீரை பருகிய காலங்கள் இன்னும் எம் நினைவில் நிற்க அக் காலத்தில் அருமையாக கேள்விப்பட்ட சிறுநீரகக் கல்லடைப்பு பிரச்னை இப்போது பிளாஸ்டிக் குடுவையில், ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (RO Filter) செய்து, பல தர நிர்ணயக் கட்டுப்பாட்டுடன் தருவிக்கப்படுவதாகச் சொல்லப்படும் தண்ணீரை அருந்தும் காலத்தில் அதிகரித்துவருகிறது.
பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளிலும் (Fast Food) துரித உணவிலும் உள்ள அதி க உப்புக்களும் சிறுநீரகக் கல் உருவாக காரணமாக அமையலாம் . சிறுநீரக குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் அல்லது சிறுநீர் வெளியேறுவதில் உள்ள சிக்கல்கள் சிறுநீர் சிறுநீர் பைகளில் தேங்கி நிற்க காரணமாகி சிறுநீர் கற்களை உருவாக்கி விடுகின்றன .
சிறுநீரக கற்கள் உங்கள் கிட்னியிலோ சிறுநீர் குழாயிலோ அல்லது சிறுநீர் பையிலோ உருவாகலாம் . சிறுநீரக கற்கலின் அற்குறிகளாக தாங்க முடியாத இடுப்பு வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் எரிவு, சிறுநீர் அடைப்பு போன்றவறறை குறிப்பிடலாம். எனினும் சிறுநீரகத்தில் உருவாகும் சில கற்கள் அமைதியாக இருந்து சிறுநீரக தொழிட்பாட்டை முடக்கி விடுகின்றன . சிறுநீரக கற்களை இன்றய நவீன மருத்துவ துறையின் தொழில்நுட்பம் இலகுவாக கண்டறிந்துவிடுகின்ற்றது .
X-Ray, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம 90 வீதமான சிறுநீரக கற்கள் கண்டறியப்படுகின்றது. CT Scan மூலம் நாம் 1௦௦ வீத சிறுநீரக கற்களை கண்டுபிடிக்கலாம். சிறுநீரக கற்கள் இலகுவாக எமது கிட்னியில் இருந்து அகற்றப்படக் கூடியவை. இன்று மருத்துவத் துறையில் இதற்கான தீர்வுகள் மிகவும் வளர்சி அடைந்துள்ளது.
வயிற்றை வெட்டி சிறுநீரக கற்கள் அகற்றிய காலம் மலையேறி சிறிய துளையினூடாக பெரியளவு கற்களையும் உடைத்து அகற்றும் மிக நுட்பமான சிகிச்சை முறைகள் பிரபல்யம் அடைந்து வருகின்றன.
‘கல்லடைப்பு’ என்று மருத்துவர் சொன்னதும் நீங்கள் பதறவேண்டியது இல்லை. அண்ணளவாக 8 மி.மீ வரையுள்ள கல்லைப் பார்த்து மிரளத் தேவை இல்லை. வலியைச் சமாளிக்கும் மருந்துகளை வைத்திய ஆலோசனையுடன் எடுப்பதும் கரைக்கும் மருந்தாக அதிகளவு நீர் பருகுவதும் போதுமானது.
அதே நேரத்தில், ‘அட… இருந்துட்டுப் போகட்டும்’ என்ற அலட்சியமும் கூடாது. கல்லடைப்பு சிறுநீர் குழாய்களில் வரும் பொழுது அது சிறுநீரகச் செயலிழப்பு வரை கொண்டு சேர்த்துவிடும்.
மருத்துவ வசதிகள் வேகமாக முன்னேறிவருகின்ற போதும் பல வகையான பாட்டி வைத்தியம் பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். வாழைத்தண்டு சாறு பருகுதல், சதைக்கரைச்சான் சாப்பிடுதல், எலுமிச்சை சாறு குடித்தால் என்னும் அவர்களது அறிவுரைகளுக்கு விஞ்ஞானம் இடம் கொடுக்காதபோதும் நடைமுறையில் மறுக்க முடியாதுள்ளது.
சிறுநீரக கற்களுக்கான புதிய சிகிச்சை முறைகள்..
1 .லிதோற்றபிஸி
சிறுநீரக கற்களின் அளவை பொறுத்து அது eswl மூலமாகவா அல்லது லேசர் மூலமாகவா என்று வைத்தியர்கள் தீர்மானிக்கின்றார்கள். ESWL, அல்ட்ரா சவுண்ட் Waves சிறுநீரக கற்களை நேரடியாக தாக்கி பொடியாக்கி சிறுநீருடன் வெளியேற்றி விடுகின்றது. சிறுநீரகத்தில் உள்ள 2CM வரை யான கற்கள் இந்த முறைக்கு பொருந்தும். மயக்க மருந்துகள் இன்றி குறைந்த நேரதில் சிறுநீரக கற்களை அகற்றி விடலாம் .
2 . லேசர் சிகிச்சை
லேசர் சிகிச்சையின் அறிமுகம் சிறுநீரக கற்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே கருத வேண்டும். சிறுநீர் துவாரத்தினூடாக மெல்லிய கமராக்களை செலுத்தி சிறுநீரக கற்களை உடைத்து முற்றாக அகற்றும் தொழில் நுட்பம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இதன் மூலம் அண்ணளவாக 2CM வரைக்குமான கற்கள் சிறுநீர் வலியில் எங்கு இருந்தாலும் அகற்ற முடியும் .
3 . PCNL
பிசினல் சத்திர சிகிச்சை நுட்பம் பழைய வயிற்றை வெட்டி சிறு நீரக கற்கள் அகற்றும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து சிறுநீரக சத்திர சிகிச்சையில் ஒரு புது யுகம் படைத்துள்ளது.
பொது மயக்க மருந்தில் இடுப்பில் 1 CM அளவான துவாரத்தின் ( Key Hole ) ஊடாக சிறுநீரகத்தில் உள்ள எந்த அளவான கற்களையும் உடைத்து அகற்றிக் கொள்ளகொள்ளலாம் .
இம் முறையில் நோயாளர்கள் இரண்டு நாட்களில் வீட்டுக்கு செல்வதுடன் ஒரு வாரத்துக்குள் தமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான பல புதிய தொழிநுட்பங்களின் அறிமுகமும் துரித வளர்ச்சியும் சிறுநீரக கற்களுக்கான நிரந்தர தீர்வாக அமைகின்றன.
எனவே சிறுநீரக கற்கள் பற்றிய அறிவும் விழிப்புணர்ச்சியும் சுத்தமான நீர் பருகுதலும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பங்கு வகிக்கின்றது என்ற தெளிவே இந்த ஆக்கத்தின் வெற்றியாகும்.
தே.அரவிந்தன்
சிறுநீரக – சனனி சத்திர சிகிச்சை நிபுணர்
அனுராதபுரம்