இலங்கை பெண்ணொருவர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்த சம்பவத்தை இந்தியாவின் கேரள பொலிஸார் உறுதி செய்துள்ளார்கள்.
சகிகலா என்ற பெயருடைய 46 வயதுடைய பெண் நேற்றிரவு 18 படிகளில் ஏறி ஐயப்பனுக்கு பூஜை செய்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சபரிமலை தேவஸ்தானத்திற்கு மாதவிடாய் வயதுடைய பருவத்தைச் சேர்ந்த பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தத் தடை அரசியல் யாப்பிற்கு முரணானது என இந்தியாவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்றத் தீர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
எனினும் மருத்துவ சான்றிதழுடன் சென்ற இலங்கை பெண்ணுக்கு சபரிமலை ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சகிகலா கருத்து வெளியிடுகையில்,
“நான் ஐயப்ப பக்தை. முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்பப் பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்து விட்டேன்.
அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும், என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். 18 படிகள் மட்டுமே ஏறினேன், சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் தரிசனம் செய்ததையடுத்து இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன.
நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஏராளமானோரை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.