ஐயப்ப பக்தர்கள் போன்று உடையணிந்து மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண்ணின் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். ஏ-09 பிரதான வீதி நாவற்குழியில் நேற்று(05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பப் பெண் யாழ்.நாவற்குழியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் சென்று விட்டு மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஐயப்ப பக்தர்கள் போன்று கறுப்பு வேட்டி மற்றும் சேர்ட் என்பன அணிந்திருந்த இருவர் மோட்டார்ச் சைக்கிளில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் திடீரென மோட்டார்ச் சைக்கிளின் வேகத்தைக் குறைத்துள்ளனர். மோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் மேற்படி பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துள்ளார்.
தங்கச் சங்கிலியை அறுத்தெடுக்கும் போது குறித்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யாழ். கைதடி வடக்கைச் சேர்ந்த 42 வயதான குடும்பப் பெண்ணுக்கும் அவருடன் பயணித்த பிள்ளைகளுக்கும் காயமேற்பட்டது.