யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியில் வெள்ள நிவாரணத்திற்கென சட்டவிரோதமாக பணம் சேகரித்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகஸ்தரென தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எழுதுமட்டுவாள் வடக்கு பகுதியில் வெள்ள நிவாரணமென கூறி குறித்த இளைஞன் இன்று (சனிக்கிழமை) பணம் சேகரித்துள்ளார்.
இதன்போது, அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள், இவ்விடயம் தொடர்பில் கிராம சேவையாளருக்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கிராம சேவையாளர், குறித்த இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது அவர் தப்பியோடியுள்ளார்.
ஆனாலும் அங்கிருந்த ஏனைய இளைஞர்கள் துரத்தி சென்று அவரை பிடித்தனர். பின்னர் கிராம சேவையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
குறித்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞனை கைது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.