பிரித்தானியாவில் பொதுவாக ஜனவரி 6ஆம் திகதியை ஆண்டின் மிகக் கொடூர நாளாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் அதாவது ஜனவரி 6-ஆம் திகதியில் சுமார் 25 சதவிகித உயிரிழப்புகள் சாதாரண நாட்களை விடவும் அதிகமாக ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புத்தாண்டின் ஆறாவது நாள் மிக அதிகமான உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளமை பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சராசரியாக 1,732 பேர் ஜனவரி ஆறாம் திகதி மாத்திரம் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதாரண நாளில் சராசரியாக 1,387 பேர் உயிரிழக்கும் நிலையில் ஜனவரி 6ஆம் திகதி மட்டும் 25 சதவிகிதம் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக ஆண்டில் 10 நாட்கள் உயிரிழப்புகள் அதிகமாக நடக்கும் என கூறப்படுகிறது. இது ஜனவரி மாதத்தின் முதல் இரு வாரமாகவும் இருக்கலாம் அல்லது டிசம்பர் மாதத்தின் இறுதி வாரமாகவும் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜனவரி 5 மற்றும் 7 ஆம் திகதிகளும் எஞ்சிய நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிக மரணம் ஏற்படும் நாட்களாக ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது காலநிலையில் திடீரென்று ஏற்படும் வீழ்ச்சியே என தெரியவந்துள்ளது. ஆண்டின் மிகவும் குளிரான மாதம் இது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.