யாழ். கைதடி பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை கொள்ளையர்கள் களவாடிச்சென்றதில், குறித்த பெண் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐயப்பன் பக்தர்கள் போன்று கறுப்பு உடைதரித்து வந்த இருவரே தன்னிடம் சங்கிலி அறுத்ததாகவும், அவர்களின் மோட்டார்சைக்கிள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்டதாக இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்
இதேவேளை யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், வீதியில் சென்ற பெண்களின் சங்கிலிகளை அறுத்து தப்பி சென்றுள்ளனர்.
இதேபோல் நல்லூர் மற்றும் சுண்டுக்குளி பகுதியில் வீதியால் சென்ற இரண்டு பெண்களின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அறுத்து தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றே என கண்டறிந்துள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்படும் கண்காணிப்பு கமராக்களின் (CCTV) உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.