திருவண்ணாமலை அருகே 3 மாத குழந்தை தனது முகச்சாடையில் இல்லை எனக் கூறி அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்ற கொடூரனை பொலிசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டை அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
பெட்டிக்கடை வைத்திருக்கும் கார்த்திகேயனுக்கு, மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தற்போது தனது மனைவி கருத்தரித்தது எப்படி என்ற சந்தேகத்தில் கார்த்திகேயன் சுற்றித் திரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குழந்தை பெற்ற பின்னர் கொழுந்தம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து அண்மையில் ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் காம்பட்டு கிராமத்திற்குச் சென்றார்.
வழக்கம் போல் தனது மனைவியுடன் சண்டையைத் தொடர்ந்த கார்த்திகேயன், 3 மாத பச்சிளங்குழந்தயை பார்த்து தனது முகச்சாடையில் இல்லை எனக் கூறி சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், பச்சிளங்குழந்தையின் தலையில், கார்த்திகேயன் அரிவாளால் வெட்டுவதைக் கண்டு ராஜேஸ்வரி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் கூடி காப்பாற்றுவதற்குள், பச்சிளங்குழந்தையின் உயிர் பறிபோனது.
தகவல் அறிந்து அங்கு சென்ற வானாபுரம் பொலிசார், குழந்தையின் சடலத்தை மீட்டனர். குழந்தையின் சடலம் துண்டு, துண்டாக இருந்ததாக பொலிசார் அதிர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
கொடூரத் தந்தை கார்த்திகேயனை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 மாதத்தில் எப்படி முகச்சாடை தெரியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், சந்தேகத் தீயால், பச்சிளங்குழந்தையை கொலை செய்து விட்டானே என்று கார்த்திகேயனை உறவினர்கள் தூற்றி வருகின்றனர்