கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று சொல்ல முடியாது. இதற்கு ஒருபோதும் நாம் இடமளியோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசரப்படாமல் பொறுமையாக இருந்தால் மூவின மக்களும் ஏற்கும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாமே முன்வந்து வழங்குவோம்.
பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு காண இதுவேதான் இறுதிச் சந்தர்ப்பம். சிங்கள மக்கள் தவறவிடக்கூடாது. தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை உறுதி செய்து, அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரங்களை மாத்திரம் பிரியுங்கள். நாட்டைப் பிரிக்க வேண்டாம் என்று கேட்கின்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கேட்டபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அரசமைப்பின் ஊடாக வரப்போகும் தீர்வை ‘ஒற்றையாட்சி’ என்று ரணில் தலைமையிலான தரப்பினரும், ‘ஒருமித்த நாடு’ என்று சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தரப்பினரும் இருவேறு குழப்பகரமான விளக்கங்களை வழங்கி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எனினும், புதிய அரசமைப்பில் சொற்பதங்கள் இருவேறு கருத்தாக இருந்தாலும் வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் சமஷ்டியை விட வலிமை பொருந்தியதாகவும், நாட்டைத் துண்டுகளாக்கும் வகையிலும் அமையப் போகின்றன. அதனால்தான் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை நாம் எதிர்க்கின்றோம்.
தீர்வுக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவல்ல. நாம் ஏற்கனவே வழங்கிய பல சந்தர்ப்பங்களை தமிழ்த் தலைமைகள் தவறவிட்டன. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்” – எனவும் கூறியுள்ளாா்.
பொறுத்திருந்து பாா்ப்போம். மகிந்தவின் தீா்வினை.