ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஜெய்கா திட்டத்தின் கீழ் இருதய நோயாளர்களின் நலன்கருதி 8 மாடி கட்டிடங்களை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிர்மாணித்து வருவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.டி.ஏ.ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அபிவிருத்திகள் குறித்தும் குறைபாடுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவர் தகவல்களை சேகரிக்க சென்ற போதே இன்று அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் பல வருடங்களாக இருதய நோயாளர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும், வைத்தியசாலையின் செலவுகளை குறைக்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டத்தின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறைபாடாக காணப்பட்ட சிறுநீரக சிகிச்சை நிலையம் எட்டு மாடிகளாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் இருதய சிகிச்சை நிலையம் போன்ற பிரிவுகள் தற்பொழுது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வருட இறுதிக்குள் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திருகோணமலை மாவட்டங்களில் இருந்து தூர இடங்களுக்குச் செல்லும் நோயாளர்களின் நலன் கருதி தங்குமிட வசதிகளையும் நிர்மாணிக்க உள்ளதாகவும் அனைத்து வசதிகளையும் கொண்ட சேவையினை வழங்க தீர்மானித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.டி.ஏ.ரோட்ரிகோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.