ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நாமல் குமாரவை கைது செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த-2009 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்து கொண்ட நாமல் குமார பயிற்சியின் போது தப்பிச் சென்றவரெனவும், பின்னர் 2011 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது தப்பிச் சென்றாரெனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
அத்துடன், இராணுவத்தில் இணைந்து கொண்ட போது அவர் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ் போலியானது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மீது எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை நாமல் குமாரவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுமென இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு எதிராக நடாத்தி வரும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவருக்கெதிரான இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.