இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றி வந்த தனியார் ஜெட் விமானமொன்று திருகோணமலை சீனக்குடா விமானத் தளத்திலிருந்து அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா,சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சிலர் தனி விமானமொன்றில் இம்மாதம்-03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த விமானம் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.
திருகோணமலையில் முதலீடுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் குழு சீனக்குடா விமானப்படைத் தளத்திலிருந்து நேற்றைய தினம்(06) சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சீனக்குடா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பயணமான முதல் விமானம் இதுவாகும்.
இதேவேளை, அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படாத விமான நிலையமொன்றிலிருந்து குறித்த விமானம் புறப்பட்டுச் சென்றமை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.