கோவையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக சிறுமியின் தந்தை, சித்தப்பா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் குழந்தைகளைக் கெட்ட நோக்கத்துடன் தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
வழக்கம் போல விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தான் இருக்கும் என்று கருதி ஏற்பாட்டாளர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதே பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்து வருவதாக அதிகாரகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனைகேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தை, சித்தப்பா மீது செல்வபுரம் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் மற்றொரு சித்தாப்பாவிற்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற மகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.