கோமாரி நோய்த் தாக்குதலால் செயல்படாமல் இருந்த திருப்பூர் கால்நடைச் சந்தைகள் கடந்த வாரம் முதல் செயல்படத் துவங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வருவாய் ஆதாரங்களில் ஒன்றாகக் கால்நடை வளர்ப்பும் உள்ளது. கடந்த மாதங்களில் கால்நடைகளுக்குப் பரவிய கோமாரி நோயால் திருப்பூர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து 5 வாரக் காலம் திருப்பூரில் உள்ள 9 கால்நடைச் சந்தைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கால்நடைகளுக்கு வேகமாக நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு அறிவுறுத்தியதன் பேரில் மாவட்ட நிர்வாகம் கால்நடைச் சந்தைகளுக்கு விடுமுறை அளித்திருந்தது.
இந்நிலையில் கால்நடைச் சந்தைகளுக்கான தடை உத்தரவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 24ஆம் தேதி நீக்கிக்கொண்டது. இதையடுத்து கடந்த வாரம் முதல் கால்நடைச் சந்தைகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் டி.என்.என். ஊடகத்திடம் பேசுகையில், “அண்மையில் பெய்த மழையால் நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் நீர் நிலைகளின் வழியாக எல்லாக் கிராமங்களிலும் கோமாரி நோய் பரவியுள்ளது. நோய்த் தொற்று தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தடை நீக்கப்பட்டுள்ளது” என்றார்.
சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு கால்நடைச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளதால், கால்நடை வளர்ப்பாளர்களும், வர்த்தகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.