வன்னியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையினாலும்,குளங்கள் திறந்து விடப்பட்டமையாலும் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
இதனால்,முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் மொத்தம் 3932 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10,118 குடும்பங்களைச் சேர்ந்த 10,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,297 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன் 11,237 கால்நடைகள் அழிந்துள்ளன.
24 மீன்பிடிப் படகுகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான இறுதி அறிக்கை அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.