மக்கள் போராட்டத்தின் காரணமாக செயல்படுவதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த தடையே தொடர்வதாக தெரிவித்திருந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமம்.
மேற்கண்ட, மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாதெனவும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விவகாரத்தில் தமிழக அரசின் தடை உத்தரவே தொடர்வதாக அறிவித்திருந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவினையின் நிறுத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க முடியாது என நேற்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.