தமிழகத்தில் தங்களுடைய 16 வயது மகளை பிரபல ரவுடியின் கூட்டாளி ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாக பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
வேலூர் கோட்டையின் சம்பத் நகரைச் சேர்ந்தவர் ரவி, இவரின் மனைவி சரஸ்வதி.
தம்பதியின் 16 வயது மகள் தேவி, வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள துணிக்கடையில் சுமார் மூன்று மாதங்களாக வேலை செய்துவந்தார்.
கடந்த 2-ம் திகதி காலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்ற தேவி, மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தேவியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளில் ஒருவரான ராமு என்பவர், தேவியை கடத்திச்சென்றிருப்பதாக, பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ரவுடியிடம் இருந்து தங்களின் மகளை மீட்டுக் கொடுங்கள் என்றுக் கூறி, பெற்றோர் நேற்று வேலூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் கெஞ்சியபடி புகார் மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்கள் மகள் புகைப்படத்தை அவர்கள் காட்டினார்கள். இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.