வடமராட்சி – பருத்தித்துறைக் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்கில் நன்கு திட்டமிட்டு இரகசியமான முறையில் கொண்டுவரப்பட் 114 கிலோக்கிராம் கஞ்சா அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இவ்வதிரடி நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை காலை நடத்தியுள்ளனர்.
பெரும் தொகையான கஞ்சா வடமராட்சி பருத்தித்துறை கடற்பகுதியூடாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலை கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர்கள் படகு மூலம் பருத்தித்துறை கடற்பரையில் கொண்டுவந்து இறக்கப்பட்ட கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு செல்வதற்கு வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் அவ்விடத்தினை சுற்றிவளைத்துள்ளனர்.
கடற்படை மற்றும் பொலிஸார் அவ்விடத்தை சுற்றிவளைத்ததை அடுத்து சுதாகரித்துக் கொண்ட கஞ்சாவினை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டுவர முற்பட்டவர்கள் கஞ்சாவினை கடற்கரையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் கஞ்சாவினை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா 114 கிலோக்கிராம் என்றும், இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.