மனைவி மீது கொண்ட தீராத காதலால் ராணுவ விமானத்தை ராணுவ தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவத்தில் தற்போது துப்புத்துலங்கியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றி வந்தவர் 23 வயதான பால் மேயர். திருமணமான புதிது என்பதால் மனைவியுடன் பொழுதை கழிக்க மிகவும் விரும்பியுள்ளார்.
ஆனால் அவருக்கு நிர்வாகம் விடுமுறை அளிக்க விரும்பவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று அதிக மதுபோதையில் இருந்த பால் மேயர்,
நான்கு இயந்திரம் கொண்ட Hercules C-130E என்ற விமானப்படை விமானத்தை தானே இயக்கிக் கொண்டு பறந்து சென்றுள்ளார்.
விமானியான இவர் அந்த விமானத்தில் போதிய எரிபொருளையும் நிரப்பிச் சென்றுள்ளார். மட்டுமின்றி ஓடுதளத்தில் செல்கையில் விமானத்தின் ஒருபக்க இறகையும் மோதவிட்டுள்ளார்.
இதனிடையே தகவல் உயர் அதிகாரிகளுக்கு செல்லவே, உடனடியாக அந்த விமானத்தை கைப்பற்ற உத்தரவு பறந்துள்ளது.
ஆனால் ஆங்கில சேனல் அருகே ரடாரில் இருந்து அந்த விமானம் மாயமானதாக தகவல் வெளியானது. முன்னதாக தமது மனைவியிடம், 5 நிமிடங்கள் என்னை தனியாக விடு, நான் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளேன் என கூறியதே அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என தெரியவந்தது.
1969 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக அப்போது தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எந்த பயனும் கிட்டவில்லை. தற்போது கடலுக்கடியில் குறித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விமானத்தை ராணுவம் சுட்டு வீழ்த்தியதா அல்லது கட்டுப்பாட்டை இழந்து தானே விபத்துக்குள்ளானதா என்ற தகவல் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.