சீனாவில் சரமாரியாக 12 குழந்தைகளின் கழுத்தை அறுத்த நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் Pingxiang நகரம் அருகே செயல்பட்டு வந்த மழலையர் பள்ளியில் புகுந்த மர்ம நபர், கையில் மறைத்து வைத்திருந்த சமையல் கத்தியை கொண்டு, திடீரென அங்கு நின்று கொண்டிருந்த குழந்தைகளின் கழுத்தை அறுக்க ஆரம்பித்தார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, அச்சத்தில் உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பித்தார்.
இதில் பலத்த காயமடைந்த 12 குழந்தைகளும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இதில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை
இதற்கிடையில் அங்கிருந்து தப்பிய நபர் பொலிசாரிடம் சரணடைந்தார். அவரைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 43 வயதான கின் பெல்கன் என்பதும், வாழ்க்கை தனக்கு பிடித்தது போல் செல்லாத காரணத்தினால் தான் இப்படி செய்தார் என்பதும் தெரியவந்தது
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சீனா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் எந்தவகையான மரண தண்டனை என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.
சீனாவில் பொதுவாக மரணதண்டனை விஷஊசி ஏற்றியோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ நிறைவேற்றப்படும். 2017ம் ஆண்டை பொறுத்தவரை அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.