ஈரோட்டில் திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் காதலனுடன் சென்றுவிட்டதால் ஆத்திரமடைந்த இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் கட்டிப்பிடித்து சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே கோபாலிபாறையை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் காவல்துறை பயிற்சி உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் மணப்பெண் ஏற்கெனவே தனது உறவினரை காதலித்து வந்துள்ளார்.
மணப்பெண் ஓட்டம்
எனவே நிச்சயிக்கப்பட்ட மணமகனை திருமணம் செய்ய விருப்பமில்லாத மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு பாதுகாப்பு கேட்டு இருவரும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது காதலன் வீட்டாரையும், மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் காவல் துறையினர் பேச்சு வார்த்தைக்காக அழைத்துள்ளனர்.
இதையடுத்து காவல் நிலையம் வந்த இரு தரப்பினரும் பொலிசார் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து சண்டை போட்டுக் கொண்டனர். அங்கிருந்த மகளிர் பொலிசார் அவர்களை எச்சரித்து விலக்கி விட்டனர்.
திருமணம் செய்த காதல் ஜோடி மேஜர் என்பதால் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு உறவினர்களுக்கு பொலிசார் அறிவுரை வழங்கினர். ஆனாலும் இரு தரப்பினரும் எந்த பதிலும் கூறாமல் கோபத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.