திருகோணமலை – சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து உரிய அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேறிய விமானம் குறித்து உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளன. சீனா, சிங்கப்பூர், ஹொங்கொங் நாடுகளைச் சேர்ந்த ஐந்து முதலீட்டாளர்களை அழைத்து வந்த குறித்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியது.
எனினும், குறித்த விமானம் உரிய அனுமதி இன்றி அங்கீகரிக்கப்படாத விமான நிலையம் ஒன்றில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த விமானம் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடன், திருகோணமலை – சீனக்குடா விமானப்படைத் தளத்திற்கு சென்றிருந்தது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தி விட்டு ஞாயிற்றுக்கிழமை சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்தே, சிங்கப்பூருக்கு அந்த ஜெட் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
அங்கீகரிக்கப்படாத விமான நிலையத்தில் இருந்து, சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறி, குறித்த விமானம் புறப்பட்டுச் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், சிவில் சமூக செயற்பட்டாளர்கள், உரிய அனுமதியின்றி ஜெட் விமானம் சீனக்குடாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சே அனுமதி அளித்திருந்தது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து துறை இதுகுறித்து விசாரணைகளை நடத்தும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.