வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படுகிறதோ, அன்றே முழுமையான மகிழ்ச்சியடைவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, லக்கலையில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்-
”நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்தக் காலத்தில் நாம் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் முழுமையான சேவைகளை செய்துள்ளோம்.
இந்த பயணத்தில் வெற்றி மட்டுமல்லாமல் தோல்விகளையும் நாம் அடைந்துள்ளோம். எவ்வாறான சவால்கள் வந்தாலும் நான் மக்களுக்கான சேவையில் ஒருபோதும் தளர்ந்துவிடப்போவதில்லை.
சமூக ரீதியான முன்னேற்றத்தை காண்பதற்கு, ஊழல் மற்றும் கொள்ளைகளே எமக்கான பாரிய சவாலாக இருக்கிறது. இவற்றை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இன்று நாட்டு மக்களுக்காக பாரிய நீர்த்தேக்கத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், வடக்கு மாகாண மக்களின் நீர்ப்பிரச்சினைக்கு எப்போது தீர்வுகாணப்படுகிறதோ, அன்றுதான் உண்மையான மகிழ்ச்சியை அடைவோம்.
மேலும், அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழ்வதற்கும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் எம்மாலான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம். இவற்றுக்காக நாம் கட்சி பேதம், அரசியல் பேதங்களை கடந்து ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
இதில் தனிப்பட்ட நபர்கள், கட்சிகளின் கொள்கைகளுக்கு இடமளிக்க முடியாது. இதனால் மட்டுமே ஆரோக்கியமான சமூகத்தை எதிர்காலத்தில் எம்மால் உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.