மனித உடல் மூழ்கிக்கிடந்த குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீரையா குடித்திருக்கிறோம்? – ஒட்டு மொத்த ராமநாதபுரம் நகர மக்களும் பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
வாட்டர் டேங்கில் இரண்டு நாளாக ஒருவர் இறந்த நிலையில் கிடக்கிறார். அதனால் குடிநீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராமநாதபுரம் நகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ராமநாதபுரம் நகரத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நகரின் மையத்தில் சுவார்ட்ஸ் பள்ளி அருகே அமைந்திருக்கிறது மேல் நிலை குடிநீர் தொட்டி. பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டியை பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் நகராட்சி சார்பில் பணியாளர்கள் இருக்கிறார்கள். உதவி செயற்பொறியாளர் மேற்பார்வையில் இந்தப் பணிகள் வழக்கமாக நடைபெறும்.
இன்று ஜனவரி 9 ஆம் தேதி காலை குடிநீர்த் தொட்டியைச் சுற்றிலும் ஒரே துர்நாற்றம் வீசத் தொடங்கியது. என்ன ஏதென யாராலும் யூகிக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் குடலைப் புரட்டும் நாற்றமாக இருந்ததால் ஒருவேளை தண்ணீர் தொட்டியின் மீது பறவைகள் ஏதாவது இறந்துகிடக்குமோ என்ற சந்தேகத்தில் தண்ணீர் தொட்டியின் சுற்றுப் படிக்கட்டுகள் வழியாக ஏறி மேலே போய் பார்த்திருக்கிறார்கள் ஊழியர்கள். மேலே நாற்றம் இன்னும் அதிகமாக வீசியிருக்கிறது. குடிநீர் தொட்டியின் மூடி திறந்து கிடந்திருக்கிறது. கடுமையான நாற்றத்துக்கு இடையே உள்ளே பார்த்தபோதுதான் மனித உடல் ஒன்று தொட்டியின் ஓரத்தில் கிடந்திருக்கிறது.
அதிர்ச்சியான ஊழியர்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, நகர காவல் நிலையத்தில் இருந்து போலீஸார் வந்தார்கள். அவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்க அதன் பின் தீயணைப்புத் துறையினர் வந்து மிதவைகளையும் கயிறுகளையும் இறக்கி அந்த உடலை வெளியே எடுத்தனர். கைலி, சட்டை அணிந்திருந்த அந்த உடல் முழுதும் ஊறிப் போய் வீக்கமெடுத்து டிகம்போஸ் ஆகியிருந்தது. அதனால், கவனமாக அந்த உடலை, ‘பாடி பேக்’ எனப்படும் பாலிதீன் பையில் வைத்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நகராட்சி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது பெயர் வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையோடு ஊழியர்கள் சிலர் பேசினார்கள்.
“ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால்தான் சார் இது நடந்திருக்கிறது. குடிநீர் தொட்டி பராமரிப்புக்கு என பணியாளர்கள் இருக்கிறார்கள். உதவிப் பொறியாளர் தினமும் காலையில் சுழல் படி மூலமாக மேலே சென்று குடிநீர் தொட்டியை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர் கண்காணிக்கவே இல்லை.
ஆனால் குடிநீர் தொட்டியின் மேலே மூன்று பிளேடுகள் கிடந்துள்ளன. அங்கங்கே ரத்தம் உறைந்து காய்ந்து கிடக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் அனேகமாக மூன்று நாட்களுக்கு முன்னதாக அவர் இறந்திருக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மாலை அல்லது இரவு நடந்திருக்க வேண்டும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என இன்றுவரை அந்த உடல் கிடந்த தொட்டியில்
இருந்துதான் ராமநாதபுரம் மக்கள் எல்லாருக்கும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இன்று உடல் சிதைந்துவிட்ட நிலையில் இந்தத் தண்ணீரை குடித்தவர்களுக்கு என்னாகுமோ என்ற பீதி ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
இன்று மதியத்துக்கு மேல்தான் குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்தவர் புத்தகக் கடை வைத்திருந்த சுதாகரன் என்று தெரியவந்திருக்கிறது. அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலில் சோகத்துடன் இருந்திருக்கிறார். அந்த சோகத்தின் காரணமாக அவர் குடிநீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கலெக்டர் வீரராகவன் வந்து கீழேயே நின்று பார்த்துவிட்டு, டேங்க்கை உடனடியாக காலி செய்துவிட்டு பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்துவிட்டு நான்கு நாள் காய வைத்து மீண்டும் சுத்தம் செய்த பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டுப் போயிருக்கிறார். நகராட்சி கமிஷனர் வீர முத்துக்குமார் ஊரில் இல்லை. நாம் அவரது அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டபோது முழு ரிங் போனதே தவிர அவர் போனை எடுக்கவில்லை.
இன்று மதியம் பொதுமக்கள் குடிநீர் தொட்டி அருகே போராட்டத்தில் இறங்க எத்தனித்தபோது போலீசார் வந்து, ‘ஒருத்தர் இறந்திருக்காரு. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். தயவு செஞ்சு கலைஞ்சு போங்க’ என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் ராமநாதபுரம் நகர மக்கள் பீதியிலும், ஆத்திரத்திலும் இருக்கிறார்கள்.