நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோத அந்நியர்களை தடுத்து நிறுத்தியபோது கொல்லப்பட்ட இளம் போலீஸ் அதிகாரியான ரோனில் ரோன் சிங் தான் அமெரிக்காவின் ஹீரோ என்று ட்ரம்ப் புகழாஞ்சலி செலுத்தினார். சட்டவிரோத அந்நியரால் அந்த இளம் அதிகாரி கொலை செய்யப்பட்டபோது அமெரிக்காவின் இதயம் நொறுங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் டிசம்பர் 26-ம் தேதிஅன்று அமெரிக்காவின் நியூமேன் காவல் துறையைச் சேர்ந்த கார்போரல் பதவியில் இருந்த ரோனில் ரோன் சிங், (33) இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி போக்குவரத்து முனை ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட ரோனில் ரோன் சிங்கின் குடும்ப உறுப்பினர்களையும், அவரது சக காவல்துறை ஊழியர்களையும் கடந்த வியாழன் அன்று ட்ரம்ப் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று (புதன்கிழமை) தொலைக்காட்சியில் தோன்றி ட்ரம்ப் பேசியதாவது:
”அமெரிக்க பிஜி தீவை பூர்வீகமாகக் கொண்ட வம்சாவளி இந்தியரான ரோனில் ரோன் சிங் 2011-ல் காவல் படையில் பணியில் இணைந்தார். சில வாரங்களுக்கு முன், 2018 டிசம்பர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மறுநாள் கலிபோர்னியாவில் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த ஒரு சட்டவிரோத அந்நியரால் இந்த இளம்போலீஸ் அதிகாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஒரு அமெரிக்க ஹீரோவின் உயிர் அநியாயமாக எங்கள் நாட்டில் உரிமை இல்லாத ஒருவரால் திருடப்பட்டுவிட்டது.
கலிபோர்னிய காவல்துறை மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்து வந்த கஸ்டாவோ சிரெஸ் அரியகா 33 என்பவரை ரோன் சிங்கை கொலை செய்ததற்காகக் கைது செய்தது.
எல்லையை சட்டவிரோதமாக மீறி வருபவர்களால் இங்குள்ள விலை மதிப்பற்ற வாழ்க்கை மீண்டும் மீண்டும் சிதைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத அந்நியர் ஒருவரால், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு விமானப்படை பெண் உயரதிகாரி ஒருவர் கற்பழிக்கப்பட்டு சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய துயரக் கதை. சமீபத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் இன்னொரு சட்டவிரோத அந்நியர் தனது அண்டை வீட்டுக்காரரின் தலையைக் கொய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேரிலேண்ட் மாகாணத்தில் சர்வதேச குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் எம்எஸ் 13 கும்பலைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழைந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒத்துழைக்காத சிறுவர்களைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒரு 16 வயது சிறுவனைக் கொடூரமாக குத்திக்கொன்ற வழக்கில் இவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் அந்நியர்களால் கொலை செய்யப்பட்டவர்களை அவர்களை நினைத்து வருந்தும் ஏராளமான குடும்பங்களை நான் சந்தித்துள்ளேன்.
தங்கள் நேசத்திற்குரிய வாரிசுகளை இழந்து கதறும் தாய்மார்களின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினேன். வருந்தும் தந்தையர்களை தழுவி ஆறுதல்சொன்னேன். மிகவும் சோகமாக இருந்தது. மிகவும் கொடூரமாக இருந்தது. அவர்களது கண்களில் தெரிந்த வலியை என்னால் எப்போதும் மறக்க முடியாது. துயரத்தினால் சிக்கித் தவிக்கும் அவர்களது குரல் தழுதழுத்தது. எனவே இந்த நாடாளுமன்றத்தின்முன் இன்னும் எவ்வளவு அமெரிக்கன் ரத்தத்தை நாம் கொட்ட வேண்டும்?
இதில் சரி மற்றும் தவறு என்ற இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உண்டு. நீதி மற்றும் அநீதி. அமெரிக்க குடிமக்களுக்கு நாம் சேவை செய்வதன் மூலம் மட்டுமேதான் நாம் நமது புனிதமான கடமையை ஆற்றமுடியும்.
நாடாளுமன்றத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியினர் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டனர். மேலும் எல்லையில் நிற்பவர்களுக்கு தகுந்த ஆயுதங்களுடன் எல்லையில் பாதுகாவலர்களை நிறுத்தி நாட்டையும் நாட்டு மக்களின் குடும்பத்தையும் தீவிரமாகப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
கூட்டாட்சி அரசாங்கம் ஒரே ஒரு காரணத்திற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஒரே ஒரு காரணம்தான், ஜனநாயகக் கட்சியினர் எல்லை பாதுகாப்புக்கு நிதியளிக்கக் கூடாது என்கிறார்கள்.
எனக்குள்ள அதிகாரத்தில் என் நிர்வாகம் எதையும் செய்ய முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் சூழ்நிலை இல்லை. இதற்கு ஒரே தீர்வு,
எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்றும் அரசாங்கத்தை மீண்டும் திறக்கவும் ஜனநாயகக் கட்சியினர் ஒரு செலவு மசோதாவை நிறைவேற்றுவதுதான்.
45 நிமிடங்களில் தீர்வு
இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு 45 நிமிடக் கூட்டத்திலேயே தீர்ப்பு கிடைத்துவிடும். நம்பிக்கையுடன், நாம் பிரிவினை அரசியலை செய்வதன்மூலம் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தலாம்.
பணக்கார அரசியல்வாதிகள் சுவர்கள், வேலிகள் மற்றும் வாயில்களை தங்கள் வீடுகளுக்குள் ஏன் கட்டுகின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வீட்டுக்குள் உள்ளவர்களை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியில் உள்ள மக்களை வெறுக்கிறார்கள், அதனால்தான் சுவர் கட்ட வேண்டாம் என்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் இந்த நிலைப்பாடு நியாயமற்றது. இதில் மிகவும் கொடூரமாக பாதிக்கப்படுகிறவர்கள் அப்பாவி மக்கள்தான்.
அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக 5 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்குவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரினேன், இதன்மூலம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை தடுப்பதற்கு இந்த சுவர் மிகமிக அவசியம் என்று தான் நம்புகிறேன்”.
இவ்வாறு ட்ரம்ப் பேசினார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது.
வெள்ளை மாளிகையில் பதவியேற்றவுடன் ட்ரம்ப் தனது முதல் பேச்சில் மெக்ஸிகோ எல்லைப்பகுதியில் மிக நீண்ட சுவர் கட்டப் போவதாக அறிவித்தார். ட்ரம்ப் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் அத்துமீறலை ஒரு சுவர் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறியதால் ஜனநாயகக் கட்சி அத்தகைய நிதியத்தை மறுத்துநாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் எதிர்த்தது.
இதனால் நாடாளுமன்றத்தைச் செயலிழக்க வைத்ததுடன் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டது. பணியாளர்களுக்கான சம்பள நிதியும் ஒதுக்குவது நிறுத்தப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத 8 லட்சம் ஊழியர்கள் சம்பளமின்றி பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.