வவுனியா, புளியங்குளம் பகுதியில் அண்மையில் ஆயுதங்களை வீசிச் சென்ற சம்பவத்துடன், 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒன்பது பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் நபர் ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றை தான் எடுத்து வைத்திருந்ததாகவும், அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்தப் பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன், 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், ஒன்பது பேர் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர் மற்றும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்ற நிலையில், பிரதான சந்தேகநபர் இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.