பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாதென பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், 1,000 ரூபாய் ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்“நீதிமன்றம், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு.1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பணம் வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.