வலி வடக்கு மீள்குடியேற்றப் பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்;
நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர்.
அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்) பெற்று வந்துள்ளார்.
அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த மாத்திரைகள் அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்டபுரத்துக்கு அண்மையில் உள்ள குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுப் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.
குறித்த விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.