கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய இரு நிறுவனங்கள் இன்னமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதனை அறிந்துகொண்ட ஆளுநர் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகவே தொடர்புகொண்டு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அத்தோடு ஐந்து நாட்களுக்கு ஒருதடவை உரிய அதிகாரிகள் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்தோடு இரணைமடு நீர்த்தேக்க அனர்த்தம் தொடர்பில் உண்மையை கண்டறியும் விசாரணைக்குழுவினை பொறியியலாளர் ரகுநாதன் தலைமையில் உடனடியாக மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனுக்கு உத்தரவிட்டார்.
ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் உள்ளிட அரச அதிகாரிகள் இதன்போது உடனிருந்தார்.