கொழும்பில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் ரீதியாக தமக்குள்ளே மோதிக் கொள்ளும் மூன்று தலைவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களான பாத்திய மற்றும் சந்தோஷின் இசை நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த பாடகர்கள் தாங்கள் இசை துறைக்கு வந்து, 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நேற்று இரவு கொழும்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒரே வரிசை ஆசனத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளுக்கு பின்னர் மூன்று பேரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
கடந்த இரு மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பிரதான நபர்களான இவர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.
அரசியல் களத்தில் மும்முனைகளாக மோதிக்கொள்ளும் மஹிந்த, மைத்திரி,ரணில் இவ்வாறு ஒன்றாக காட்சியளிப்பது நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மூன்று தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக நாடு பாரியளவு பின்னடைந்துள்ளதுடன் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.