மனித மனங்களையெல்லாம் வேதனைக் கடலில் ஆழ்த்தி விட்டு இந்த இளம் வயதில் வைத்தியநிபுணர் ரகுபதி வழிபாட்டுக்குரிய ஒருவராகி விட்டார். அவரை நீள நினைந்து நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையிலேயே வைத்திய நிபுணர் ரகுபதியின் இழப்பை எண்ணி ஊர் அழுதது. அவரை அறிந்தவர்கள் அனைவரும் அழுதார்கள். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், பணியாளர்கள் என அனைவருமே தொடர்ந்தும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், இணுவில் அறிவாலயத்தின் ஸ்தாபகருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம்-11 ஆம் திகதி மாரடைப்பால் காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொதுவைத்திய நிபுணர் அமரர் அம்பலவாணர் ரகுபதியின் 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை(09-01-2019)முற்பகல் இணுவில் அறிவாலய மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரைப் பொறுத்தவரை அவர் பெருமையுடன் போய்விட்டார். ஆனால், எமது இணுவில் கிராமம் ஏதோ தவக் குறைவொன்றைச் செய்துள்ளது. ஒரு தனிப் பெரும் வித்தகனை நாங்கள் இழந்துள்ளோம்
குறிஞ்சி மலர் பல வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். அதேபோன்று தான் மனிதர்களிலும் சிலபேர் குறிஞ்சிப் பூ போன்று பூக்கிறார்கள்.
இணுவிலைச் சேர்ந்த அம்பலவாணர் தம்பதிகள் பெற்றெடுத்த இளைய புதல்வன் சிறந்த வைத்திய நிபுணராகி தான் பிறந்த கிராமத்துக்குப் பணியாற்றுவதற்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நியமனம் பெற்றார்.
தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கியுள்ள 121 பெண் பிள்ளைகளும் அடிக்கடி நோய்வாய்ப்படும் போதெல்லாம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே போகச் சொல்லுவேன். அவர்களை மிகவும் கவனித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி வைத்திய நிபுணர் திருப்பி அனுப்புவார்.
அதுமட்டுமன்றி துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பணி செய்கின்றவர்களும் சிகிச்சைகளுக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கே செல்வார்கள். அவர் இறப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கூட எங்கள் தேவஸ்தானத்தில் பணி புரிகின்ற சண்முகநாதன் என்பவரை சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்தேன். அன்றைய தினம் மாலை வேளையில் அவருக்கு வைத்தியம் செய்து மறுநாள் காலையில் நீங்கள் வழமை போன்று சென்று கோயிலில் உங்கள் பணியைச் செய்யுங்கள். அடுத்தவாரம் என்னிடம் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால், அடுத்த வாரம் வருவதற்கு முன்னரே ரகுபதி எங்களையெல்லாம் விட்டுச்
சென்று விட்டார்.
உண்மையில் ரகுபதியின் பிரிவு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மனித வாழ்வை நெகிழ வைத்துள்ளது. ரகுபதியின் பிரிவிற்குப் பின்னர் தங்கள் உடலைப் பரிசோதனை செய்வதற்காக பல பேர் வைத்தியசாலைக்கு ஓடினார்கள். அவரது திடீர் பிரிவிற்கு காரணமான நோய் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எங்கள் அனைவருக்கும் அப்பாற்பட்டது தான் இறப்பு. யாருக்குமே தெரியாமல் காலன் எங்களுக்கு முன்னர் வருகின்றான். திடீர் நோய்வாய்ப்பட்ட வைத்தியகலாநிதி ரகுபதி தானாக அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து வைத்தியசாலைக்குத் தானே வாகனத்தில் ஏறிச் சென்றார். அவர் மீண்டும் வந்து விடுவாரென்று தான் அவர் சார்ந்த அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால், காலன் முந்தி விட்டான்.
வைத்திய நிபுணர் லக்ஸ்மன் கூறும் போது எனக்கு அர்த்த ஜாமத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது. நானும் வைத்தியசாலை சென்று பார்வையிட்டேன். ஏதாவது குற்றுயிராவது காணப்பட்டால் ரகுவைக் காப்பாற்றி விடலாமென முயற்சித்தோம். ஆனால்,அதற்கு முன்னரே காலன் கொண்டு போய்விட்டான் என்று கூறினார்.
வைத்திய நிபுணர் ரகுபதியைப் பற்றி நாங்கள் எத்தனை மணி நேரமும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், அவருடைய காதல் நாயகியாகிய மனைவியை தேற்றிக் கொள்ள எமக்குத் தெம்பில்லை. பிள்ளைகளுக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாரினில் ஆளாக்கிய நிலையில் தற்போது அருமையான அந்த மைந்தரை இழந்து தவிக்கின்ற ரகுபதியின் தாயார் திருமதி- அம்பலவாணருக்கு ஆறுதல் சொல்லவும் எம்மிடம் வார்த்தைகளில்லை.
ஆகவே, அவரை இழந்து தவிக்கும் உறவுகள் அனைவருக்கும் தைரியம் கொடு என நாமனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அவருடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்க நாமனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அவரது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் தைரியத்தை வழங்கு என கடவுளை மன்றாடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை.
நண்பர் வைத்தியநிபுணர் பார்த்தீபன் இங்கிலாந்திலிருந்து வருகை தந்தவுடன் என்னைப் பார்த்துச் சொன்னார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த வைத்தியர்கள் இணைந்து உபகரணங்கள் கொள்வனவு செய்து வழங்கி ரகுபதியின் பெயரைச் சூட்ட எண்ணியுள்ளோம்.
இதுதொடர்பில் வைத்திய அத்தியட்சகரைக் கேட்டிருக்கின்றோம். அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறினார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் வைத்தியநிபுணர் ரகுபதியின் பெயர் பொறிக்கப்படவிருப்பது சற்று ஆறுதலைத் தருகின்றது. இதனை ஏற்பாடு செய்த நண்பருக்கு நான் கிராம மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.