நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் சவேந்திர சில்வாவே இருந்துள்ளார். இது தொடர்பான நேரடியான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தமிழ்மக்களுடைய மனங்களை ஜனாதிபதி வெல்ல வேண்டுமாயின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மண்ணில் தமிழர் தரப்பிற்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது. எந்தவொரு நீதியையும் நாங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது என்ற அடிப்படையில் தான் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனத்தை கருத முடிகின்றது. சவேந்திர சில்வா கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களுக்குச் செல்கின்ற போது எந்த நேரத்தில் இவர் கைது செய்யப்படுவாரோ? என்ற சூழல் நிலவி வந்தது. இவ்வாறானதொரு நிலையில் அவருக்கு இராணுவத்தில் புதிய பதவி வழங்கப்பட்டிருப்பது தமிழர்களின் உணர்வுகளை மதிக்காததொன்றாகவே நோக்க முடிகின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் என்னதான் நல்லாட்சி என்று தென்னிலங்கையில் பேசிக் கொண்டாலும் கூட யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களின் மனங்களையோ, உணர்வுகளையோ அரசாங்கத்தால் வெல்ல முடியவில்லை. ஒரு போதும் வெல்லவும் முடியாது.
எனவே,சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனமானது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்க்கின்ற அல்லது நிராகரிக்கின்ற செயற்பாடாக அமைந்துள்ளது. எனவே, சர்வதேச சமூகம் இதுதொடர்பிலும் கவனம் கொள்ள வேண்டும்.
தமிழ்மக்களுடைய இனப் பிரச்சினை ஆரம்பித்து ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. சரணடைந்து காணாமற் போன எனது கணவரின் வழக்கு கூட சவேந்திர சில்வாவுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. ஏனெனில், இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக சவேந்திர சில்வாவே காணப்பட்டிருக்கின்றார்.
இறுதிப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து கைகுலுக்கிய நடேசண்ணை உட்பட பல சாட்சியங்களை ஐ.நா சபையில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறலைச் செய்ய வேண்டுமென அழுத்தம் திருத்தமாகப் பேசிவரும் மனித உரிமை செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்காவின் கருத்துக் கூட கடும் விசனத்தை சர்வதேச மட்டத்திலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இவற்றையெல்லாம் அறிந்தும் கூட ஜனாதிபதியினால் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம் என்பது கவலையளிக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.