பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காணாமல் போன பெண் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பரஸிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்பெயின் சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்தார். குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், குறித்த கட்டடத்தில் வசித்துவந்த 28 வயதான யுவதியும் உயிரிழந்துள்ளார்.
பாரிய வெடிவிபத்தாக இச்சம்பவம் பதிவாகியுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகள் மேலும் சில நாட்களுக்கு தொடருமென தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து 100 மீற்றர் தூரத்திலுள்ள 12 குடியிருப்புக்கள் பாதுகாப்பு நிமித்தம் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்த மக்கள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வசிப்பிடங்களில் தங்கியுள்ளனர். சுமார் 150 பேர் இவ்வாறு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய தகவலின் பிரகாரம் 47 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 9 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.