உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெயர் பரிசீலனையில் உள்ளதாக வரும் தகவல்களுக்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் என்பவரின் பதவிக்காலம் (அவர் முன்கூட்டியே பதவி விலகுவதால்) வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது
புதிய தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும் அவரது மூத்த ஆலோசகருமாக இவாங்கா டிரம்ப் முயன்று வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது.
இதுபோன்ற செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறையின் துணை இயக்குனர் ஜெசிக்கா டிட்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிதிமந்திரி ஸ்டீவன் முனுச்சின் மற்றும் வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் குழுவின் தலைவர் மிக் முல்வானே ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க உலக வங்கியின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பான பரிசீலனையில் கடந்த இரண்டாண்டுகளாக இவாங்கா ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதராக தற்போது பதவி வகிக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான நிக்கி ஹாலே உள்ளிட்டவர்களின் பெயர்கள் உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக முன்னர் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.
அமெரிக்க அரசின் ஒப்புதலை பெற்ற நபர்கள் மட்டுமே இந்த பதவியில் அமர முடியும் என்ற நிலையில் உலக வங்கியின் அடுத்த தலைவராக முன்மொழியும் பெயர்களை உறுப்பு நாடுகள் வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் மார்ச் 14-க்குள் பரிந்துரைக்க வேண்டும்.
பின்னர், ஏப்ரல் மாதம் நடைபெறும் இவ்வங்கியின் செயல் இயக்குனர்கள் கூட்டத்தில் புதிய தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படும்.