தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், தலவாக்கலை பொலிஸார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகின்றனர்.
தற்போது நிலவிவரும் கடும் வெயில் மற்றும் காற்று காரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகிறது.
மலையத்தின் பல பிரதேசங்களில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில், வனப்பிரதேசங்கள் இவ்வாறு தீ மூட்டப்படுவதனால் நீர்த்தட்டுப்பாடு உக்கிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.