இலங்கையின் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். அதன்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகஓவைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நிதியுதவி தொடர்பான இணக்கப்பாட்டை அறிவித்தார்.
இந்த தொகையில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கொழும்பு துறைமுக பிரவேச நெடுஞ்சாலையை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்த நெடுஞ்சாலை தூண்களின் மேல் நிர்மாணிக்கப்பட உள்ளது. நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்சாத்தியக்கூறு ஆய்விற்குரிய தொழில்நுட்ப உதவிகளுக்காகவும் 10 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கைகளில் இலங்கை ஜனாதிபதியும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரும் கைச்சாத்திட்டார்கள். வறுமையும், போதைப்பொருளும் இலங்கை எதிர்கொண்டுள்ள இரு பிரதான சவால்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். வறுமையை நீக்கி போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இயற்கை அனர்த்தங்களைச் சமாளிப்பதற்கான சீரான வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான திட்டங்களுக்கு உதவி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இணக்கம் தெரிவித்தார். இலங்கை எதிர்பார்த்த இலக்குகளை முழுமையாக அடையாவிட்டாலும், கணிசமான பொருளாதார அபிவிருத்தியை தனதாக்கிக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். மின்வலு பாதுகாப்பு, விவசாயம், சுற்றாடல் முதலான துறைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு உதவி செய்கிறது. சுகாதாரத்துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அந்த வங்கி பாராட்டுவதாக தலைவர் தக்கஹிக்கோ நக்காவோ குறிப்பிட்டார். பயங்கரவாதம் தோற்கடிப்ப்பட்ட பின்னர் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.