இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நெருக்கடி நிலை காரணமாக, சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுதலுக்காக ஏற்கனவே முடங்கிய நிலையில் உள்ள செயற்பாடுகளை மேலும் மலினப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலைமை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி, “ஜனாதிபதியினுடைய அரசியல் நகர்வுகள் காரணமாக இலங்கையில் 3 தசாப்தகாலம் நீண்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், தம்முடைய நீதிக்காக அருகிவரும் நம்பிக்கைகள் மேலும் காலதாமதம் ஆகுவதை கண்டுகொண்டுள்ளனர்.
இந்த துயர சம்பவமானது, பொறுப்பு கூறல் தொடர்பிலே சிறிசேனவின் அரசாங்கம் விரைவானதும் அர்த்தபூர்வமானதுமான நகர்வுகளை எடுக்க தவறி விட்டத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றது.” என கூறினார்.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் 674 பக்கங்கள் கொண்ட இந்த உலக அறிக்கையானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் மனித உரிமை செயற்பாடுகளை மீள் பார்வைக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது