ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தொடர்பில் தமக்கு இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து ஜெர்மனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
39 வயதுடைய G. நவநீதன் என்பவரே ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென The Associated Press செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த நபர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலையில் ஈடுபட்ட குழுவின் ஒரு உறுப்பினராக செயற்பட்டதுடன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்த போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைக் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் ஸ்னைஃபர் துப்பாக்கியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.