செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.