ராமர் கோவில் கட்டுவது குறித்த, ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர், பையாஜி ஜோஷியின் கருத்துக்கள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛வரும், 2025க்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என, பையாஜி கூறினார்.
‛அப்படியென்றால், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காது என, ஆர்.எஸ்.எஸ்., கருதுகிறதா’ என்ற வகையில், சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்போதே கோவில் கட்ட துவங்கினாலும், அதை கட்டி முடிக்க, ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாவது ஆகும். அதை வைத்துத்தான், அவர் அப்படி பேசியுள்ளார். அவர், 2025ல் கோவில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற வகையில் தான் பேசியுள்ளாரே தவிர, கட்டுமான பணிகளை துவக்குவது குறித்து பேசவில்லை.
பையாஜியின் பேச்சுக்கு அரசியல் சாயம் பூசுவது தவறு’’ என, அந்த அமைப்பை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.