சிங்கப்பூரில் தண்டிக்கப்பட இருக்கும் பிரித்தானிய இளைஞன் தனக்கு அளிக்கப்பட இருக்கும் தண்டனை குறித்து தினமும் பயந்தே செத்துக் கொண்டிருக்கிறார்.
பிரித்தானிய இளைஞர் ஒருவர் போதை மருந்து விற்ற குற்றத்திற்காக அவர் சிங்கப்பூரில் தண்டிக்கப்படவுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் சிங்கப்பூர் கோடீஸ்வரர் ஒருவரின் மகன் Ye Ming Yuen (29). பள்ளிப்பருவத்தில் பிரபல பள்ளி ஒன்றில் படித்த Yuen, படிப்பில் படு சுட்டி. ஆனால் வளர்ந்து வரும்போது அவனது நட்பு வட்டாரம் போதை படுகுழிக்குள் அவனை தள்ளியது.
கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த சிங்கப்பூருக்கு சென்று விட்டால் சுய கட்டுப்பாட்டுடன் வாழலாம் என்று எண்ணி Yuen சிங்கப்பூருக்கு சென்றார்.
ஆனால் போதை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் சிங்கப்பூரிலும் இரவு வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. குறுகிய காலகட்டத்தில் புகழ் பெற்ற DJவாக மாறிவிட்ட Yuenஐ சிங்கப்பூர் வந்தும் போதைப்பொருட்கள் விடவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் போதை பொருட்கள் விற்றதற்காக பொலிஸாரிடம் சிக்கினார் Yuen. அவருக்கு 20 ஆண்டுகள் சிறையும், 24 பிரம்படிகளும் தண்டனை என தீர்ப்பளிக்கபட்டுள்ள நிலையில், தனக்கு அளிக்கப்பட இருக்கும் பிரம்படிகளை எண்ணி தினமும் Yuen செத்து செத்து வாழ்கிறார்.
காரணம் பிரம்படி என்பது சிங்கப்பூரில் ஒரு கொடுமையான தண்டனை ஆகும். தண்டிக்கப்பட இருக்கும் நபரை நிர்வாணமாக்கி, ஒரு மரச்சட்டத்துடன் கட்டி வைத்து, அவரது பின்பக்கங்களில் 4 அடி நீளமும் அரை அடி அகலமும் கொண்ட பிரம்பால், அடிப்பதற்கு பயிற்சி பெற்ற ஒருவர் ஓங்கி ஓங்கி அடிப்பார். மூன்றே அடிகளில் பின்பக்கத்தில் தோல் உரிந்துவிடும்.
அதன்மீது அடுத்த அடி விழுந்தால் வலியில் உயிர் போவது போல் இருக்கும். பெரும்பாலானோர் மூன்று அல்லது நான்கு அடிகளில் மயங்கி விழுந்து விடுவார்கள். இதனால், தான் எப்படி 24 அடிகளைத் தாங்கப் போகிறேன் என்று Yuen நடுங்கிப்போயிருக்கிறார்
24 சவுக்கடிகள் என்பது கொலைகாரர்களுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் சிங்கப்பூரில் வழங்கப்படும் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்னொருபக்கம், போதை குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பதும், Yuen குறைந்த அளவே போதைப்பொருள் வைத்திருந்ததால், அவருக்கு மரண தண்டனைக்கு பதில் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.