புற்றுநோயால் உயிரிழந்த தலைமை ஆசிரியையின் இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் தலைமை ஆசிரியை உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த சூ ஈஸ்ட் (வயது 58) என்பவர் மாணவ மாணவிகளின் அன்பைப் பெற்றவர். ஏனெனில் அவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வி கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது.
அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.
உயிருக்காக போராடியபோது அவர் தனது மாணவ, மாணவிகளுக்கு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்தக் கடிதத்தில் அவர் தான் புற்றுநோயால் அவதியுற்று வருவதையும், தான் விரைவில் உயிரிழந்து விடுவேன் என்பதையும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார்.
அவரது இறுதிச்சடங்கில் அவரிடம் படித்த, படித்துக்கொண்டிருந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர்.
அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது.