வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமீனனை உள்வாங்கியமை குறித்து வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே .சிவஞானம் கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ்.நல்லூரில் இன்று இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மேமாதம்18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்பும் வகையில் செயற்பட்ட யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஷ்ணமீனனை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தனது கட்சியில் இணைத்துக் கொண்டமை தவறு எனவும் வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறானவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வதன் மூலம் விக்னேஸ்வரன் தனக்குத் தானே மண்ணை அள்ளிப் போடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.