2019 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் 2 மில்லியன் மரக்கன்றுகளை நடும் “Earth Watchmen” திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிரிக்கெட் மட்டைகளை தயாரிப்பதற்காக வருடாந்தம் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாகவும் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மர நடுகை தொடர்பான பொறுப்பை எடுத்துக்காட்டும் வகையிலும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினதும் சம்பத் வங்கியினதும் அனுசரணையில் இந்த செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது
இந்த மர நடுகை செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வகையில் ஜனாதிபதி முதலாவது மரக்கன்றை நாட்டியதுடன், அதனைத் தொடர்ந்து பாடசாலை சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்குபற்றுதலில் 1500 மரக்கன்றுகள் ஒரே தடவையில் நடப்பட்டன.
கிளிநொச்சி நகரை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மரம் நடுகை செயற்திட்டத்துடன் வடக்கையும் தெற்கையும் இணைத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்களான தயா கமகே, ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், “Earth Watchmen” திட்டத்தின் பணிப்பாளர் நலின் ஆட்டிகல, சம்பத் வங்கியின் சிரேஷ்ட மேலதிக பொது முகாமையாளர் தாரக ரன்வல தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சாரங்க விஜேரத்ன, யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.