குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தாய் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவரது மகன் கருப்பையன் (வயது 39).
கூலி தொழிலாளியான கருப்பையனுக்கு வேம்பரசி என்ற மனைவியும், ஹரி ஹரன் (15), கலையரசன் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கருப்பையன் அடிக்கடி மது குடித்து விட்டு தனது தந்தை கரும்பாயிரம், தாய் மாரியம்மாள்(65) மற்றும் மனைவி வேம்பரசி ஆகியோரிடம் தகராறு செய்து வந்தார்.
இதேபோல் கடந்த பொங்கல் பண்டிகை அன்று கருப்பையன், வேம்பரசியிடம் வழக்கம் போல் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு கருப்பையன் மது குடித்து விட்டு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தந்தை கரும்பாயிரம், தாய் மாரியம்மாள் ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் போதையில் மாரியம்மாளை அடிக்க பாய்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள், அருகே கிடந்த கம்பை எடுத்து கருப்பையனின் தலையில் பலமாக ஓங்கி அடித்தார். இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மாரியம்மாள் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை சரண் அடைந்தார். போதையில் மகன் தகராறு செய்ததால் கொலை செய்து விட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கருப்பையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகனை அடித்து கொன்று சரண் அடைந்த தாய் மாரியம்மாளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெற்ற மகன் என்றும் பாராமல் தாயே அடித்து கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.