தண்ணீர் எடுக்க சென்றபோது 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி அரைமணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டார்.
குரோம்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). நேற்று இரவு அவர் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். கிணற்றின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருந்ததால் திடீரென அவர் நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தார்.
இரவுநேரம் என்பதால் சரோஜா கிணற்றுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்க வில்லை. அவர் தண்ணீரில் தத்தளித்தபடி கிணற்றில் உள்ள சுவரை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்,
இதற்கிடையே சரோஜா திரும்பி வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தேடியபோது கிணற்றுக்குள் இருந்து சரோஜா காப்பாற்றும்படி கூச்சலிட்டது தெரிந்தது.
இதுபற்றி உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரோஜா வயதானவர் என்பதால் அவரை கயிறு கட்டி மீட்பதில் சவால் ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி துரிதமாக செயல்பட்டனர். அவர்கள் சரோஜாவை பத்திரமாக கயிறுகட்டி மேலே கொண்டு வந்தனர்.
அவர் பத்திரமாக மீட்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
சரோஜாவுக்கு கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கிணற்றுக்குள் விழுந்த அரை மணிநேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.