உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் தந்தையின் மருத்துவச் செலவுக்காக ஆண் வேடமிட்டு 4 ஆண்டுகள் முடி திருத்தும் தொழில் செய்த வந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் துருவ் நாராயணன். கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அவரால் தொடா்ந்து இயங்க முடியாமல் படுத்தப்படுக்கையாக இருந்தார்.
இவருக்கு ஜோதி குமாரி(18), நேகா(16) என்ற இரு மகள்கள் இருந்தனா். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்த நிலையில் நாராயணன் செய்து வந்த முடிதிருத்தும் தொழில் மட்டுமே இவா்களுக்கு உதவியாக இருந்து வந்தது.
ஆனால் தந்தை நோயுற்றதால் வருமானம் இன்றி குடும்பம் மிகுந்த இன்னலை சந்தித்துள்ளது. இதனைத் தொடா்ந்து ஜோதி மற்றும் நேகா தந்தையின் முடிதிருத்தும் தொழிலை தாங்களே செய்ய முடிவு செய்தனா். ஆனால் இருவரும் பெண்கள் என்பதால் இவா்களது கடைக்கு யாரும் வருவதில்லை. கடைக்கு வரும் ஒருசிலரும் இவா்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனா்.
இதனால் வேதனையடைந்த ஜோதி மற்றும் நேகா ஆண் வேடமிட்டு தொழிலை மீண்டும் தொடங்கலாம் என்று முடிவு செய்தனா். அதனைத் தொடா்ந்து இருவரும் தங்கள் முடியை வெட்டிக்கொண்டு கைகளில் காப்பு அணிந்து கொண்டனா். தங்களது பெயா்களையும் தீபக், ராஜூ என்று மாற்றிக்கொண்டு மீண்டும் தொழில் செய்யத் தொடங்கினா். இவா்களின் நிலை குறித்து உள்ளூா் காரா்களுக்கு ஏற்கனவே தெரியும் இருப்பினும் அவா்களது தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து பலரும் வரத்தொடங்கினா்.
இதற்காக ஜோதி, நேகாவை மாவட்ட அரசு அதிகாரிகள் கௌரவித்துள்ளனா்.