கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியால் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவமும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நேற்று கிளிநொச்சியிலிருந்து ஜெயபுரம் பாடசாலைக்கு ஏ-32 வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரை பூநகரி ஜெயபுரம் மண்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து வழிமறித்த நால்வர் கொண்ட காடையர் குழுவினர் அவர்களை அச்சுறுத்தி காட்டுப் பகுதிக்குள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை ஆசிரியைகள் இருவரும் அலறியுள்ளனர். அவர்கள் காட்டுப் பகுதியில் கத்தும் சத்தம் கேட்டகவே, வீதியால் சென்ற மக்களும் காட்டுப் பகுதிக்குள் முகாமமைத்திருந்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதனை அவதானித்த காடையர்கள் ஆசிரியைகளைக் கடத்தும் முயற்சியைக் கைவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓட முற்பட்ட வேளை இராணுவத்தினரும் மக்களும் இணைந்து காடையர்கள் இருவரைப் பிடித்து ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, கடத்தல்காரர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிடிபட்ட இருவரும் விசுவமடு மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொவலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் இருவர் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளை கடத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பிடிபட்ட கடத்தல் காரக் காடையர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டு இனிமேல் காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது இருக்க உரிய பொறுப்பு வாய்ந்தவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.