இலங்கையில் இனிமேல் செயற்கையாக மழையைப் பெய்விப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் இலங்கை மின்சக்தி எரிசக்தி அமைச்சு சிறிலங்கா விமானப் படையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி வறட்சி நிலவும் பகுதிகளில் தொழிநுட்ப உதவியுடன் செயற்கையாக மழையினைப் பொழிய வைத்து வரட்சியைப் போக்குவதற்கான உபாயம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இதன்படி இந்த தொழிநுட்ப உதவிக்காக விமானப் படையின் விமானங்களும் ராடார்களும் மழையினைப் பொழிய வைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
செயற்கை மழையை எவ்வாறு பெய்ய வைப்பது?
இதற்கென நான்கு படிமுறைகள் பின்பற்றப்படும்.
1.இலங்கை வான்படையின் ராடார்களின் உதவியுடன் வரட்சி நிலவும் பகுதிகளில் உள்ள மழைக்குச் சாத்தியமான முகில்களை இனங்காண்பது.
2.அந்த இடங்களில் இலங்கை விமானப்படையினர் தமது சிறிய ரக விமானங்களில் பறந்து சில்வர் அயோடைட், அம்மோனியம் நைட்ரைட் மற்றும் கல்சியம் குளோரைட் போன்ற இரசாயனங்களை வெளிவிடுவார்கள்.
3.இந்த இரசாயனங்கள் முகில்களுடன் தாக்கம் புரிந்து பனித்துகள்கள் உருவாவதற்கு உதவுகின்றன.
4.இந்த பனித்துகள்கள் கனமாவதால் அவற்றால் முகிலிடைவெளியில் தங்கிநிற்பது சாத்தியமற்ற ஒன்றாகிறது. இதனால் அவை பூமியை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பூமியை நோக்கி வரும் வழியில் நீராக கரைந்து மழையாக உருவாகி மண்ணில் பொழிகின்றன.
இந்த நான்கு படிமுறைகளின் அடிப்படையில் இலங்கையில் கடுமையான வரட்சி நிலவும் பிரதேசங்களில் இனிமேல் மழையைப் பெய்விக்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.