இன்று காதல் தோல்வி என்பது பெரும்பாலான இளம்வயதினர் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆனால் பிரேக் அப்பிற்கு பிறகான காலகட்டத்தில் அந்த சூழ்நிலையை உண்மையில் நாம் அறிந்ததைவிட கடினமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறோம்.
லவ் பிரேக் – ப்பா? உடனே பசங்க தாடி வளர்த்துக்கிட்டு தண்ணி, தம்முன்னு சுத்தனும், பொண்ணுங்கனா சோகமா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து, அழுது தவிக்கணும். இதைத்தான் தமிழ் சினிமா நமக்குக் காலங்காலமாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மன நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது?
எப்படி வெளியே வருவது?
கல்வி, வேலை, திருமணம் என்பது போல காதலும் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கிப் பயணித்தால் திருமணத்திலும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் இடம் கொடுக்காமல் போனால் பிரேக் அப்பிலும் முடிகிறது என்ற எளிய உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும். பிரேக் அப் சோகத்திலிருந்து மிக விரைவில் வெளியேறிவிட முடியும்.
ஆடை, தோற்றம்
வழக்கமாக உங்களுக்கு பிடித்ததை விட உங்களுடைய காதலிக்குப் பிடித்தது போலத்தான் அதிகமாக ஆடைகள் அணிந்திருப்பீர்கள். நடை பாவனை இருந்திருக்கும். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முதலில் உங்களுக்கு எது பிடிககுமோ அதை செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரி ஆடைகளை அணியுங்கள்.
உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும் வகையில் சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். பிடித்தமான ஆடைகளை வாங்கி அணியுங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றிவிடும். உங்களுக்கே உங்களைப் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
சோசியல் மீடியாஸ்
நடந்து முடிந்த பழைய விஷயங்களைத் தோண்டி ஆராய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் உங்கள் முன்னால் காதலன்/காதலியை நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்து விடுங்கள்.
சமூக ஊடகங்களில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதால், நம் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடகத் தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.
பரிசுப் பொருள்கள்
இதிலெல்லாம் நோ சென்டிமெண்ட்ஸ். காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது தான் நல்லது. அதை பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்ப்பதெல்லாம் வீண். அது சிலருக்கு தன்னை குற்றவாளியாகவும் தன்னுடைய இயலாமையையும் அல்லது தான் காதலித்த நபர் மீது கோபத்தையுமு் வன்மத்தையும் மட்டுமே அதிகரிக்கச் செய்யும். அதற்கு உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில், நீங்கள் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி பக்குவமடையும் வரையில், உங்கள் நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்து வைத்திருங்கள்.
வருத்தப்படுதல்
நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு காட்ட வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் அதையதை அப்படியே வெளிக்காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும்.
பார்ட்டி
இதுவரையிலும் காதலி, காதலி என்று நண்பர்களையெல்லாம் மறந்து ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருப்பீர்கள். அதனால் மீண்டும் நண்பர்களைத் தேடிப் போங்கள். இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். மிட்நைட் பார்ட்டி, பைக் ரைடிங் போன்ற உற்சாகமூட்டும் செயல்களில் ஈடுபடலாம்.
டிராவல்
பயணங்கள் பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். ஏதேனும் பணிச்சுமை காரணமாக பயணங்கள் சென்றால்தான் மனம் அலுப்படையுமே தவிர மற்ற நேரங்களில் பயணங்கள் உங்களுக்குள் நிறைய விஷயங்களை விதைக்கும். நிறைய புதிய புதிய வித்தியாசமான வாழ்க்கை முறையில் உள்ள மனிதர்களைச் சந்திப்பீர்கள்.
அது உங்களுக்கு நிறைய புதுப்புது அனுபவ்ஙகளையும் வாழ்ககையையும் கற்றுக் கொடுக்கும். எந்த இடத்துக்கு செல்கிறீர்களோ அந்த இடத்தை முழு மனதோடு ரசியுங்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்ற மனிதர்களை ரசியுங்கள். உங்களுக்கு அதை விட பல மடங்கு அன்பு தேடி வரும். ஒரு விஷயம் தெரியுமா? ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களைக் கடந்து செல்லும் நபரின் நடை, உடை, பாவனை, செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருப்பது மிகவும் அலாதியான ஒரு அனுபவமாக இருக்கும்.
யோகா, ஜிம்
பொதுவாக ஆண்களுக்கு நிறைய பேருக்கும் ஜிம்முக்குச் சென்று உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் காதல் என்று வந்தபிறகு, எப்போதும் காதலி பின்னால் சுற்றவும் அவளுக்குப் பிடித்ததை செய்வதற்கு 24 மணி நேரம் போதுவதில்லை. ஆனால் காதல் தோல்வி என்ற ஒரு விஷயம் உங்களை வாட்டி எடுக்கும்போது மீண்டும் உங்கள் உடலைப் பற்றி சிந்திக்க ஆரம்பியுங்கள். அந்த வலி பறந்து போய்விடும். அதேபோல் அலுவலகங்களில் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொண்டால் உங்கள் மனம் முழுக்க அந்த வேலைக்குள்ளே தான் புதந்திருக்குமே ஒழிய உங்களை விட்டுவிட்டுச் சென்ற காதலியை தேடிப் போகாது.
இதுவே பெண்ணாக இருந்தால் ஜிம்முக்குப் போகலாம். அது பிடிக்கவில்லை என்றால், வீட்டிலேயே தினமும் யோகாசனம் செய்யுங்கள். மனம் ஒருநிலைப்படும். அமைதியடையும்.
புத்தக வாசிப்பு
உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், படிப்பதில் ஆய்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் இருந்தால் மிக எளிதாக இன்னும் இந்த பிரேக் அப் சோகத்திலிருந்து மீண்டுவிட முடியும். புத்தகத்தை விட உலகில் சிறந்த நண்பன் வேறு யாரும் கிடையாது என்பார்கள். அதனால் தான் உலகில் உள்ள பேரறிஞர்கள் எல்லோரும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை விடவும் புத்தகங்களை அதிகம் நேசித்தார்கள். புத்தகங்கள் உங்கள் சோகத்தையும் உங்களையும் சேர்த்து தனக்குள் மூழ்கடித்துக் கொண்டு, உங்கள் மனதை லேசாக்கிவிடும்.