மத்திய மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மெருகூட்டல் முதலான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஓப்பீட்டளவில் மத்திய மாகாணம் ஏனைய மாகாணங்களை விடவும் சிறந்த சுற்றாடல் கட்டமைப்பைக் கொண்டு விளங்குகிறது. எனவே அதனைப் பாதுகாத்தல் அபிவிருத்தி செய்தல் என்பன முக்கியமாகும்.
அந்த வகையில் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் அமைப்புக்களுடன் இணைந்து செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கொஹாகொடை குப்பை மேடு தொடர்பாக ஒரு தீர்வு பெறுவதற்கும், மத்திய மாகாணத்தின் இயற்கை பூகோள அழிப்பு தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார்.
சுற்றாடல் சட்டங்களை மதிக்காது தீங்கு விளைவிப்போர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் விளம்பர சுவரொட்டிகள் பாரிய பிரச்சினையாக இருப்பதால் கண்டி நகரில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு உரிய இடங்களை ஒதுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.